புதுடெல்லி:

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

சென்னையில் கடந்த வாரம் நடந்த சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6 இடங்கள் முன்னேறி 97-வது இடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த 29 வயதான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் ‘டாப்-100 இடத்துக்குள் முதல்முறையாக நுழைந்துள்ளார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 100-வது இடத்துக்குள் முன்னேறிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே சோம்தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் இந்த இலக்கை எட்டி இருந்தனர்.

97-வது இடத்தை பிடித்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அளித்த பேட்டியில், ‘என்னை பொறுத்தமட்டில் இது சிறந்த மைல் கல்லாகும். கடினமான உழைப்பின் மூலம் இந்த சீசனில் எனது பல இலக்குகளில் முதல் இலக்கை எட்டி இருக்கிறேன். இந்த ஆண்டு நல்ல தொடக்கம் கண்டுள்ளேன். இன்னும் பல விஷயங்களில் நான் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. உடல் தகுதிக்காக இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ராம்குமார் 5 இடம் முன்னேறி 128-வது இடமும், காயத்தில் சிக்கி தவித்து வரும் யுகி பாம்ப்ரி 4 இடம் சரிந்து 156-வது இடமும், சகெத் மைனெனி 5 இடம் ஏற்றம் கண்டு 255-வது இடமும், சசிகுமார் முகுந்த் 22 இடம் முன்னேறி 271-வது இடமும் பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 37-வது இடத்தில் நீடிக்கிறார். அவருடன் இணைந்து ஆடும் திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 39-வது இடமும், லியாண்டர் பெயஸ் 7 இடம் ஏற்றம் கண்டு 75-வது இடமும், ஜீவன் நெடுஞ்செழியன் 2 இடம் முன்னேறி 77-வது இடமும், புரவ் ராஜா 3 இடம் முன்னேறி 100-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக் குடியரசு வீராங் கனை கிவிடோவா, ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங் கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் நீடிக்கின்றனர். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 3 இடம் முன்னேறி 165-வது இடத்தையும், கர்மான் கவுர் தாண்டி ஒரு இடம் சரிந்து 211-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here