திருவள்ளூர், மே. 27 –

1500 பேருக்கு பணி வழங்க வேண்டும், 250 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பழவேற்காடு மீனவர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக எல்&டி கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி கடந்த 2008- இல் 1,750 பேருக்கு நிர்வாகம் தரப்பில் வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அதன் முதற் கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 250 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளை கடந்தும் அவர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனவும், மீதமுள்ள 1500 பேருக்கு பணியே இதுவரை வழங்கவில்லை எனக்கூறி அந்நிறுவனத்தின் அலட்சியம் மற்றும் ஏமாற்றச்செயல்களைக் கண்டித்தும் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அப்பகுதி மீனவ இன மக்கள் கடந்த 23-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் நாள் போராட்டத்தில் கப்பல் கட்டும் தளம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி கைதாகினர். இரண்டாவது நாளில் படகுகள் மூலம் கடல் மார்க்கமாக சென்று கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மூன்றாவது நாளான நேற்று,  பழவேற்காடு லைட்-ஹவுஸ் முதல் பஜார் வரை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

.3 நாட்களாகியும்,  நிர்வாகம் தரப்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால்,  இன்று நான்காவது நாளாக பழவேற்காடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் படகுகள் மூலமாக கடல் மார்க்கமாக சென்று கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தில் வரும் கப்பலை மறித்து  முற்றுகையிட்டு  நங்கூரமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேப் போல, மீனவ  பெண்கள் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள், பழவேற்காடு பஜாரில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அங்குள்ள வணிகர்களும் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பழவேற்காட்டில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அங்கு முகாமிட்டுள்ளார்.

ஆட்சியர் போராட்டத்தில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here