கும்பகோணம், மே. 13 –

கும்பகோணம் அருகேயுள்ள  தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர தர்மசாஸ்தா திருக்கோயில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பார் வேட்டை நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு வயல் வெளிகளில் சுவாமிகளின் முன்னோட்டம், பின்னோட்டங்களை கண்டு, பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தண்டந்தோட்டம் கிராமத்தில், சோழர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்ற பழம்பெருமை வாய்ந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை பிரமோற்சவ திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்

அதுபோலவே இவ்வாண்டு இவ்விழா, கடந்த 04ம் தேதி புதன்கிழமை பூச்சொரிதலுடன் துவங்கி தொடர்ந்து 06ம் தேதி வெள்ளிக்கிழமை காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான நேற்று (12ம் தேதி வியாழக்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான பார் வேட்டை ஊர் எல்லையில் ஆயிரக்கணக்காண கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது

இதற்காக ஊரில் இருந்து சிறப்பு மலர் அலங்காரத்தில், சிவப்பு குதிரையில் அய்யனாரும், வெள்ளை குதிரையில் முத்து வேலாயுதசுவாமியும் என உற்சவர்கள் பவனி வர சுமார் 2 கி.மீ தொலைவில் வயல் வெளி பகுதிகளை முன்னோட்டம் பின்னோட்டமாக ஊர் எல்லையில் அடைந்து, அங்கு வயல் வெளியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, உற்சவ சுவாமிகளுக்கு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

ஆண்டிற்கு ஒருமுறை காணும் இவ்விசித்திர கோயில் திருவிழாவை காண, துக்காட்சி, குமாரமங்களம், திருப்பந்துரை, நாச்சியார்கோயில், திருநறையூர், செம்பியவரம்பல், வில்லியவரம்பல், முருக்கங்குடி, புத்தகரம், திருமாந்துறை, அய்யாவாடி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்,    இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, திருக்கோயிலில் உள்ள மூலவர் முத்து வேலாயுதசுவாமி மற்றும் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதணையும் நடைபெற்றது சித்திரை பிரமோற்சவ பெருந்திருவிழா வருகிற 14ம் தேதி சனிக்கிழமையுடன் இனிதே நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here