மீஞ்சூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இயற்கை / அங்கக விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து அதானி காட்டுப் பள்ளி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு துறை மற்றும் அதானி அறக்கட்டளை சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் மூலம் இயற்கை முறையில் விளைந்த நெற் தானியங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு வர்த்தகர்களின் தேவைப்படி மத்திய அரசின் அங்கக சான்று பெற ஏதுவாக நடப்பு 2023-24 ஆம் நிதி ஆண்டில் 4 ஊராட்சிகளைச் சார்ந்த 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு 126.28 ஏக்கர் பரப்பு தமிழ்நாடு அரசு அங்கக சான்று துறையில் பதிவு செய்யப்பட்டு அங்கக நெல் சாகுபடியில் அங்கக விவசாய முறைகள் மேற்கொள்ளப்பட்டது.
இயற்கை இடு பொருட்களான பசுந்தாழ் உர விதைகள், உயர் விளைச்சல் நெல் ரக விதைகள், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்கள். ஜிங் சல்பேட் ஆகியவை வழங்கப்பட்டு பஞ்சகாவியா முதலான இயற்கை முறைகளை தயாரிக்கவும் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இத்திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கக (இயற்கை) விவசாயத்தை கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் பின்பற்றி நல்ல லாபம் ஈட்டும் பொருட்டு இயற்கை விவசாயிகளின் உற்பத்தி நிறுவனம் ஒன்று வருகின்ற 2024-25 நிதி ஆண்டில் நிறுவிட அதானி அறக்கட்டளை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 விவசாய தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாய முறைகளை கையாள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது நெற்பயிர் அறுவடை நடைபெற்று காட்டூர் கிராமத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை சிறப்பு விருந்தினராக சார் ஆட்சியர் வஹே சங்கீத் பல்வந்த், சென்னை அங்கக சான்று துறை இயக்குநர் டாக்டர்.சுரேஷ், பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர், அதானி காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகம் தலைமை செயல் அதிகாரி கேப்டன் மதன்மோகன், தென்னிந்திய அறக்கட்டளை தலைவர் டாக்டர்.அணில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.