கும்பகோணம், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் அருகே வாலிபரை வெட்டி படுகொலை செய்து உடலை சாகுபடி செய்த வயலுக்குள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை அடுத்த மேலாத்துக்குறிச்சி மயானக்கரை சாலையில் ரமேஷ் என்பவருடைய குத்தகை வயலில் 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை நடை பயிற்சிக்குச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே நீலத்தநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் இளவரசனுக்கு பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் இளவரசன் நேரில் வந்து பார்த்து சுவாமிமலை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன், சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு சிவ செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் படுகொலை நடைபெற்ற வயலுக்கு சென்று பார்வையிட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட வயல்வெளியை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட வாலிபர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சுவாமிமலை காவல்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் மற்றும் தடைய அறிவியல் ஆய்வாளர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் ஏதாவது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா எனவும், அதில் குற்றவாளிகள் தொடர்பான ஏதேனும் தடயம் கிடைக்கிறதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.