சென்னை:

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் 9 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், ஒரு தொகுதியில் புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள தொகுதிகள் ஆகும்.
இதனால் இந்த 9 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் போட்டி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களே இந்த 9 தொகுதிகளில் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவை களம் இறக்க ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கிய தொகுதி ஒன்றில் நிறுத்தி குஷ்புவை பாராளுமன்றத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ராகுல் வியூகம் வகுத்து இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாட்டில் குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக குஷ்பு விருதுநகரில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

இதுபற்றி குஷ்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பது கடந்த சில பேட்டிகளில் அவர் அளித்த பதில்கள் மூலம் உணர முடிகிறது.

பெரும்பாலான தடவை அவர், “நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை சீட் கேட்கவில்லை. ஒருவேளை தலைவர் ராகுல்காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் மறுக்க மாட்டேன். நிச்சயம் போட்டியிடுவேன்.

இல்லை என்றாலும் நான் கவலைப்படப்போவது இல்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு தீவிர பிரசாரம் செய்வேன். எனது திட்டத்தில் மாற்றம் இல்லை” என்று கூறியுள்ளார்.

எனவே விருதுநகரில் குஷ்பு களம் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here