கும்பகோணம், நவ. 24 –

கும்பகோணம் அருகே உள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆட்டோ நகரில் சிதலமடைந்து கிடக்கும் சாலைகளை சீர் செய்திடவும், சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்திடவும் கோரி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்து, கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அப்பகுதி குடியிருப்புவாசிகள் வழங்கினர்.

கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட தலித்துக்கள் வசிக்கும், ஆட்டோ நகரில் ஐந்து தெருக்கள் உள்ளது. இப் பகுதியில்   தினக்கூலி தொழிலாளர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு, உள்ள 5 தெருக்களில் மூன்று மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலைகள் மற்றும் சாக்கடைகளை பெயர்த்து எடுத்து புதிதாக குழாய்களை பதித்து சென்றுள்ளனர். இப்பணியின் போது 5 தெருக்களிலும் இருந்த சாலைகளும் சாக்கடைகளும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.

இப்பணி முடிவடைந்து பல மாதங்கள் ஆன பின்பும், இதனை முழுமையாக சீரமைக்காததால், சாக்கடை கழிவு நீர் மற்றும் மழைநீர் 5 தெருக்களிலும் நிரம்பி வழிந்தோடி வழிகிறது, இதனால் தேங்கி நிற்கும் அசுத்தமான கழிவுநீரால்  கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, இங்கு வசிப்போர்,  காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டின் வாசலிலும், சில இடங்களில் வீட்டிற்கு உள்ளேயும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை சாலைகளும் சாக்கடைகளும் சீரமைக்கப்பட வில்லை எனவும், அப்பகுதியில்  60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அப்பகுதியில் ஒரே ஒரு கழிப்பறை மட்டும்தான் உள்ளது. இதில் ஆண்களுக்கு கழிப்பறை இல்லை  எனவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

மேலும் புதியதாக கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் . போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர  வலியுறுத்தி, அரசு கலைக்கல்லூரி ரவுண்டானா அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு, கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு   நகராட்சி மற்றும் பெரும்பாண்டி ஊராட்சியின் அலட்சியப் போக்கைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அரண் நிர்வாகி சைமன் மக்கள் அரசு கட்சி எழிலன் வழக்கறிஞர் கென்னடி கண்ணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆண், பெண் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here