கும்பகோணம், மே. 03 –
பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு கண்டெய்னர் லாரியில் உள்ள ரகசிய அறையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் எடையிலான குட்கா பறிமுதல்.செய்யப்பட்டு அது தொடர்பாக 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி நேற்று இரவு கும்பகோணம் பெரியகடைவீதி வந்துள்ளது. இதில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் கண்டெய்னர் லாரியை திறந்து சோதனையிட்டதில் முதலில் ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் கன்டெய்னர் லாரி உள்ளே ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது. அதனை திறந்து பார்த்ததில் இருந்த ஒரு டன் எடையிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் இருந்தது உறுதியானது அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அதனைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நால்வர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் என ஆறு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
குட்காவை கடத்திய கண்டய்னர் லாரி கிழக்கு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கன்டெய்னர் லாரி பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு குட்கா பொருட்களை எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, மற்றும் விசாரணை மேற்கொண்ட ஆறு நபர்களையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.
                
		




















