கும்பகோணம், செப். 08 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மாச்சத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை பார்வையிட்ட தஞ்சை காவல்துறை துணை தலைவர் டிஐஜி கயல்விழி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

அம்மாச்சத்திரம் கடைவீதி பகுதியில் குடோன் அமைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை பதப்படுத்தி சிறு பாக்கெட்டுகளாக போடப்பட்டு விற்பனைக்கு அனுப்புவது குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குடோனை பார்வையிட்டதில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை, அதனை கட் செய்யும் மிஷின் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. புகையிலையை சிறு துண்டுகளாக வெட்டி அதனை கருப்பட்டியில் ஊறவைத்து மிளகாய் சேர்த்து பதப்படுத்தி பின்னர் சிறு பாக்கெட்டுகளாக போட்டு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணை செய்ததில் இதே பகுதியில் மற்றொரு வீட்டில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் 10.6 டன் தடை செய்யப்பட்ட புகையிலை தற்போது கைப்பற்றி உள்ளோம். இதன் சந்தை மதிப்பு சுமார்  ரூ.25 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படிருந்த குடோனுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இது தொடர்பாக குடோன் உரிமையாளர் செல்வகுமார், அவரது சகோதரர் சிவக்குமார், பார்ட்னர் வெங்கடேஷ் ஆகிய மூவரை கைது செய்துள்ளோம். செல்வகுமார் சாப்ட்வேர் இன்ஜினியர் என்பதும்,  அவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் புகையிலை விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லோடு ஆட்டோக்கள், ஒரு ஆம்னி வேனை கைப்பற்றி உள்ளோம். என்று டிஐஜி கயல்விழி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here