செங்கல்பட்டு, மே. 20 –

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் அவ்வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகளின் பயன்பாட்டு தகுதிக் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

முன்னதாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹிம் முன்னிலையில் போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவ்வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 271 பேருந்துகளை பயன்பாடுக் குறித்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் அப்பேருந்தில் மருத்துவ முதலுதவிக்கான மருந்துகள் அடங்கிய பெட்டி மற்றும் திடீரென ஏற்படும் தீ விபத்துக் காலங்களில் அதனை தடுத்திடும் வகையில் தீயணைப்பு வாயு நிரப்பிய உருளைகள் உள்ளனவா, எனவும், மேலும் அப் பேருந்துகள் சிறப்பாக செயல்படும் தன்மையில் உள்ளதா என்பது போன்றவைகள் குறித்து வாகனங்களை ஓட்டச் சொல்லி வேக கட்டுப்பாட்டின் தன்மை மற்றும் வேகத்தடை மீட்டர் செயல்பாடுகள் முக விளக்கு மற்றும் வலது இடது பின்பக்க முன்பக்க இன்டிக்கேட்டர் அனைத்து விளக்குகளின் தன்மைகள் குறித்தும் அவ்வாய்வின் போது சரிவர ஆராயப்பட்டது,

முதலுதவி பெட்டியில் உள்ள மருந்தின் காலவதி நாட்கள் குறித்தும் ஓட்டுநரின் உரிமம் மற்றும் பேருந்தின் ஆவணங்கள் உள்ளிட்டவைகளும் பரிசோதிக்கப்பட்டது.

தொடர்ந்து, பள்ளிக்குழந்தைகள் அமர்ந்து செல்லும் இருக்கைகள் மற்றும் பேருந்தின் உள்புற நடைப்பாதை தளம், மற்றும் அவசர வழிப்பாதை போன்றவற்றில் குறைபாடுகள் உள்ளனவா என்பது போன்ற ஆய்வுகளை மிகுந்த கவனம் கொண்டு அவர்கள் ஆராய்ந்தனர்.

மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 271 பள்ளி பேருந்துகளில் சுமார் 23 வாகனங்களின் பயன்பாடு குறைகளை இவ்வாய்வின் போது கண்டறிந்து அவற்றினை பயன்படுத்துவதற்கான தர மேம்பாடுகளை ஏற்படுத்தி மறு ஆய்விற்கு வரும்படி அப்பேருந்துகளை கோட்டாட்சியர் தலைமையிலான அவ்வாய்வுக்குழு திருப்பி அனுப்பினார்கள். மற்றும் அப்பேருந்துகளின் பள்ளி நிர்வாகம், ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

மேலும் ஓட்டுநர்களுக்கு பள்ளி வாகனங்களை எப்படி இயக்குவது குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவது, என்பது உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் ஓட்டுனர்களுக்கு ஆபத்தான காலக்கட்டத்தின் போது, எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு விபத்துகளை தடுப்பது, மற்றும் குழந்தைகளின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதுக் குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here