காஞ்சிபுரம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோவில் முழுவதும் கருங் கற்களால், அழகிய வேலைபாடுகளுடன்,18 சித்தர்களின் உருவங்களோடு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அகத்தியர் மகரிஷிக்கு தனி கோவிலாக கட்டியுள்ள திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி, உள்ளிட்ட ஏழு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு 151 கலசங்கள் வைத்து ஐந்து யாக குண்டங்களில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் பூரண ஹதி முடித்து,புனித நீர் கலசங்கள் மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்து,வேத மந்திரங்கள் ஓதி,சிறப்பு பூஜைகள் செய்து, அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து மூன்று அடி உயரத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ள மூலவர் லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களின் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மகா கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு,சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.
மகா கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மா,பலா, வாழை என முக்கனிகளுடன் கூடிய சிறப்பு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் குமரவேல் பொருளாளர் ருத்ரகுமார் உள்ளிட்ட விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.