காஞ்சிபுரம், பிப். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப் பெருமாள் திருக்கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சுவாமியை மனமுருகி வழிப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுட்கால வழிபாட்டு தலமாகவும் விளங்கி வருவது, அருள்மிகு ஸ்ரீ ரூக்மணி சமேத பாண்டவ தூத பெருமாள் திருக்கோவிலாகும்.

மேலும் இத்திருத் தலத்தில் பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமிழிசையாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடகம் என மங்களாசாசனம் பாடப்பட்ட தலமாக விளங்கி வருவதாக இத் தல வரலாறு தெரிவிக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணர் துரியோதனன் சபைக்கு தூது சென்ற சமயத்தில் எடுத்த விஸ்வரூப வடிவில் வீற்றிருந்த பெருமாளாக இத்திருக்கோயில் காட்சியளித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

அத்தகுச் சிறப்புமிக்க திருக்கோவிலில் கடந்த 1989 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றிருந்த நிலையில், தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் ராஜகோபுரத்திற்கும், மூலவர் கோபுரத்திற்கும், ருக்மணி தாயார் சன்னதி கோபுரத்திற்கும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினார்கள்.

பாண்டதூதப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு கோபுர மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here