கும்பகோணம், மார்ச். 24 –
கும்பகோணம் அருகே புறவழிச் சுற்றுச் சாலையில் மீதமுள்ள கிருஷ்ணாபுரம்- தாராசுரம் வரை சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, சாலைக்கான இடம் அளவீடு செய்து நில எடுப்பிற்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தரிசு நிலத்தில் செய்த அளவீட்டை மாற்றி, தற்போது, விளை நிலங்களில் சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள இருப்பதாக வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில், அதற்கு எதிர்ப்பு மற்றும் அச்செயலை கண்டிக்கும் வகையிலும், சாக்கோட்டை கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயச் சங்க திருவாரூர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சற்குணம், சீத்தாராமன், பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.ராமநாதன், ஒன்றியச் செயலாளர் அறிவழகன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நெசவாளர் அணி பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.