சீர்காழியில், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அதனைப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது..
மேலும் சில இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதனால் சில தினங்களாக வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த வானிலையும் நிலவி வருகிறது. அதுப்போன்று சீர்காழி அருகே மடவாமேடு கிராமத்தில் இன்று காலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் இருந்த மயில் தனது தோகையை விரித்து சுமார் 15 நிமிடம் தெருவில் உலா வந்தது.
அந்த ரம்மியமான காட்சியை பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் செல்போன்களில் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.






















