தரங்கம்பாடி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை இடியுடன் கூடிய மழை திருக்கடையூரில் இடிதாக்கி மாடு உயிரிழப்பு. மாட்டை கட்டுவதற்காக சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்தவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்மனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், மணல்மேடு ஆகிய பல்வேறு இடங்களில் பரவலாக காற்று இடியுடன் மழை பெய்தது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அபிஷேக கட்டளையைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் மனைவி உமா (50) என்பவர் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தபோது திருக்கடையூர் அரசு விதை பண்ணை அருகில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த தனது சினை மாட்டை கட்டுவதற்காக சென்று உள்ளார்.
அப்போது இடி தாக்கி சினை மாடு உயிரிழந்தது. இடி விழுந்த போது ஏற்பட்ட அதிர்வில் உமா வயலிலேயே மயங்கி சரிந்தார். தொடர்ந்து உமாவை அவரது உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





















