தஞ்சாவூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு….
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பல மணி நேரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
அவர்களில் பலர் கோடை வெயிலின் கொடூரம் தாங்காமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து ஆளிநர்கள் கோடையில் சோர்வின்றி பணியாற்றும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை காலம் முழுவதும் இயற்கை குளிர்பானங்கள் வழங்கும் திட்டத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழா தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகே நடைபெற்றது.
தஞ்சாவூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து போக்குவரத்து காவலர்கள் அனைவருக்கும் எலுமிச்சை சாறு , ரோஸ்மில்க் , பாதாம்பால் ஆகியவற்றை வழங்கி அத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் கோடைகாலங்களில் போக்குவரத்து காவலர்கள் தங்களது உடல் நலனை பேணிக் காக்க அறிவுரைகள் வழங்கினார். அது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில் தஞ்சை நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலத்தில் முழுவதும் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் இயற்கை குளிர்பானங்களான ஆப்பிள் பழச்சாறு , சாத்துக்குடி , மாதுளை பழச்சாறு, தர்பூசணி பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, சப்போட்டா, ஆரஞ்சு பழச்சாறு, இளநீர், நீர்மோர் உள்ளிட்டவை கோடை காலம் முடியும் வரை தினமும் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்றார்.
தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளர் ரமேஷ் அவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கும் தஞ்சை நகர போக்குவரத்து காவலர்கள் குளிர்பானங்களை வழங்கினார்கள். அதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



















