திருவாரூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பொது மக்கள் வைத்திருந்த பைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட பகுதிகளில் இஞ்ச் இஞ்சாக அவர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அதேப் போன்று ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்த போது பல ஆண்டுகளாக செயலிழந்த தீயணைப்பு கருவிகள் இருந்தது அப்போது தெரிய வந்தது.
உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு கருவிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் திடீர் திடீரென நடத்தப்படும் எனவும் சாதாரணமாக நடத்தப்படும் இந்த சோதனை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பயணிகள் அச்சம் அடைய தேவை இல்லை எனவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு திடீர் சோதனை செய்த சம்பவம் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


















