கும்பகோணம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது
தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார் எனவும், சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குவதாக அத்திருத்தல வரலாறு கூறுகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தின் பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதே போல இவ்வாண்டுக்கான விழா, நேற்றுக் காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சூரியபிரபை, சந்திர பிரபை,பூத வாகனம், ஷேச வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான 19 ஆம் தேதி ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 7ஆம் திருநாளாக 21ஆம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், ஒன்பதாம் நாள் விழாவாக 23 ஆம் தேதி திருத்தேரோட்டம் பத்தாம் நாள் விழாவாக 24 ஆம் தேதி பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுவதாகவும், மேலும் 11 ஆம் நாள் 25 ஆம் தேதி ஸப்தாவரணம், 12 ஆம் நாள் 26 ஆம் தேதி விடையாற்றி, வீதியுலா 13 நாள் 27 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தைடன் இவ்வாண்டுடிற்கான விழா நிறைவு பெறுவதாக அத்திருக்கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது. மேலும் அச்சிறப்பு மிகு நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் கோவில் செயல் அலுவலர் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.



















