திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர் குடவாசல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வாகனம் விபத்துக்குள்ளாகி அவருடைய இடது காலில் முறிவு ஏற்பட்டு விட்டது. உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவ காப்பீடு அட்டை இருக்கிறதா என கேட்டு விட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலில் தகடு (பிளேட்) பொருத்தியுள்ளார்கள். அதன் பிறகு ஓராண்டு காலமாக அவர் கல்லூரிக்கு செல்லவில்லை, காலில் தகடு வைக்கப்பட்டு இருந்ததால் அவருடைய இரண்டாம் ஆண்டு படிப்பு முழுவதும் வீணாகிவிட்டதாக பாதிக்கபட்ட மாணவி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது தகடு அவருடைய காலில் இருந்து அகற்றப்பட வேண்டிய காலம் வந்ததால் அதனை அகற்ற திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு கொடுக்க வேண்டிய பணம் எங்களுக்கு வரவில்லை எனவும், மேலும் உங்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ள அட்டையில் முகவரி மாறி உள்ளது. ஆகவே அதை சரி செய்து வாருங்கள் அப்பொழுதுதான் காலில் உள்ள தகடை அகற்ற முடியும் என தெரிவித்து விட்டதாகவும், அதனால் இந்த ஆண்டும் என்னுடைய கல்லூரி படிப்பு கேள்விக் குறியாக உள்ளதாகவும், மேலும் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி என் தந்தைக்கு மூன்றுமே பெண் பிள்ளைகள், ஆகவே என்னுடைய காலில் உள்ள தகட்டினை அகற்றி நான் கல்வி பயில உதவுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயிடம் மாணவி அபிநயா தனது தந்தையுடன் வந்து கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.






















