பழவேற்காடு, டிச. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, அன்றிலிருந்து மீனவர்கள் புயல் கரையை கடந்தும் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் கடல்பகுதியில் கழிவு எண்ணைக் கடலில் கலந்தது. அதனால் அப்பகுதி வாழ் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்..
மேலும் எண்ணெய் கழிவுகளின் படலம் பழவேற்காடு கடல் பகுதிகளிலும் பரவத்தொடங்கியது அதனால் பழவேற்காட்டை சுற்றி உள்ள கிராமங்களை சார்ந்த 40க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார்கள்.
. ஏற்கனவே புயல் வெள்ளப்பாதிப்பால் பாதிப்புக்குள்ளான மீனவத் தொழிலாளிகள், கடந்த ஒரு மாதமாக தொழிலுக்கு கடலுக்கு செல்ல முடியாத நிலையில், அவ் எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்திய பாதிப்பால் மேலும் கடுமையான பாதிப்புக்குகளுக்கு ஆளாகி சுமார் 40 கிராம மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
அதனால் பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்கள் தங்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் மற்றும் மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்த அலுவலர்கள் அவர்களுடனான பேச்சு வார்த்தையினை மேற்கொண்டனர்.
அதில் உரைநிகழ்த்திய மாவட்ட ஆட்சியர், மீனவ சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும் எனவும், மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீனவ சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் பெறவும், மீன்வளத்துறை சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்கு வழிமுறைகள் மற்றும் கடன் உதவிகள் பெற்றுத் தருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த உறுதிமொழியினை மீனவ தொழிலாளிகள் அனைவரும் 36 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
























