திருப்பாலைவனம், நவ. 27 –
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும் பணி தொடர்பாக அரசு சார்பில் அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி பேபியம்மாளை அங்கிருந்து அகற்றி, அவருக்கு மாற்று இடமாக வஞ்சிவாக்கம் கூட்டுரோடு அருகில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் இடம் ஒதுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் அப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லையெனவும், மேலும் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கக் கூடிய பகுதியில் இடம் கொடுத்ததால் வீடு கட்டிய நாளிலிருந்து மழை நீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக உள்ளதெனவும், அதனால் தனக்கு தினசரி வேலைகளை எதுவும் செய்திட முடியாத நிலை உள்ளதாகவும், மேலும் வீடு மற்றும் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து, பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப் பூச்சிகள் தனைத் தீண்டுவதாகவும், அதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் வந்தாலும் உயிருக்கு எவ்வித ஆபத்துக்களும் தற்போது வரை இறைவனின் அருளால் ஏற்படவில்லையென மிகுந்த ஆதங்கத்துடனும் பரிதாபத்துடனும் அம் மூதாட்டி தெரிவிக்கிறார்.
அவரின் நிலைக்குறித்து பலமுறை அரசுத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தன்னிலையறிந்து உதவிட வேண்டும் எனக் அவர் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித உதவிகளும் தனக்கு கிடைக்கவில்லை என வாழ்க்கையை வெறுக்கும் விதமாக தெரிவிக்கின்றார்.
மேலும் தான் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டு மூன்றாண்டுகளாகியும் பிரதான சாலையில் இருந்து கிராம சாலைக்கு வந்து வீட்டிற்கு செல்வதற்கு வழி இல்லாமல் வயதான காலத்தில் முற்புதர் வழியாகவே வரும் நிலை இருக்கிறது என்கிறார்.
தினசரி க் காலை கடன்களை கழிக்க அருகாமையில் கட்டி உள்ள பொது கழிப்பறையும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அதனையும் பயன்படுத்த முடியாத சூழலே உள்ளதாக மூதாட்டி தெரிவிக்கின்றார்.
குடிநீர் இணைப்பு வழங்கப்படாததால் வீட்டு அருகிலேயே கிணறு தோண்டி தண்ணீரை பயன்படுத்திவரும் மூதாட்டிக்கு மழை காலங்களில் கிணறும் குளமாக மாறுவதால் அதை பயன்படுத்த முடியாமல் தண்ணீருக்கும் வழி இல்லாமல் உள்ளார்.
மேலும் தனக்கு துணையாக வீட்டில் ஆடுகள் வளர்ப்பதால் மழைக்காலங்களில் வீட்டிலும் வீட்டை சுற்றிலும் தண்ணீர் சூழும் போது தான் படுத்திருக்கும் கட்டிலை ஆடுகளை காப்பாற்றுவதற்காக பங்கிட்டு ஆடுகளுடன் படுத்து உறங்குவதாகவும், சில நேரத்தில் அந்த ஆடுகளும் சிறுநீர் மற்றும் கழிவுகளை படுக்கையிலே போட்டு விடுவதால் அதிலேயே படுத்து உறங்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக மூதாட்டி தெரிவிக்கின்றார்.
பல மணி நேரம் போராடி சமையல் செய்து தனக்கும் ஆடுகளுக்கும் உணவை பங்கிட்டு சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். வீடு முழுவதும் மழை நீர் சூழ்ந்து பாதங்கள் தண்ணீரிலேயே இருப்பதால் கால்களில் புண்கள் ஏற்பட்டு நடப்பதற்கு கூட சிரமப்பட்டு தட்டு தடுமாறி விழுந்து வாழ்வதற்கு போராடும் மூதாட்டிக்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என மூதாட்டி பேபியம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்நிலையால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துக்கொள்ளும் மனநிலை ஏற்படுவதாகவும் அம்மூதாட்டி மிகவும் மன வேதனையுடன் தெரிவிக்கின்றார். இதில் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தனக்கு உதவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மூதாட்டி காத்திருக்கிறார்.


















