திருவாரூர், ஜன. 02 –
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம். அடைந்தார். இதனையடுத்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பவித்ரா வயது 26. கர்ப்பிணியான பவித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 29ஆம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் இருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். இதன்படி 29 ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி பவித்ரா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென பவித்ராவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியே எடுத்தனர். இதில் பவித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் ஒரு குழந்தை அப்போதே இறந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவித்ராவிற்கு மூச்சு திணறல் அதிகம் ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பவித்ரா மரணமடைந்த தகவல் இரண்டு மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உறவினர்கள் பவித்ராவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பவித்ராவை சாதாரண வார்டில் பெட்டில் வைத்து அறுவை சிகிச்சை செய்ததாகவும், புத்தாண்டு என்பதால் மருத்துவர்கள் பணியில் இல்லாத நிலையில் செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்தததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் ஏற்கனவே காடம்பாடி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
மேலும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தால் நிச்சயம் மரணம் உறுதி என வேதனையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

























