கும்பகோணம், டிச. 30 –
கும்பகோணத்தில் மூத்தகுடி மக்களுக்கான பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட கோரி, ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக விளங்கும் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் வேலையில் தொடர்ந்து ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.
மேலும், ரயில்வேயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியுள்ளது. ரயில்வேயில் மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களின் போது சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, பெண் பயணிகளுக்கு 58 வயது ஆனவர்களுக்கு 50% பயண சலுகையும், 60வயதான ஆண் பயணிகளுக்கு 40% பயண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மத்திய அரசு நிறுத்தியது. கொரோனா முடிந்த பின்னர் இது வழக்கம்போல வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக அச்சலுகைகள் வழங்கப்படவேயில்லை.
இதனால் ரயில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், அதனை மீண்டும் வழங்கவேண்டும் என பொதுமக்களும் ரயில் பயணிகள் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதனை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளனர். மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகை மீண்டும் வழங்கிட கோரி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த அப்பட்டத்தில் வட்டச் செயலாளர் பக்ரிசாமி அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க சிவாஜி மனோகரன் சி ஐ டி யு மாவட்ட தலைவர் கண்ணன் மற்றும் சிவராமன் கண்ணாமணி கல்யாணசுந்தரம் சந்திர மோகன் உள்ளிட்ட ஏராளமான மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.