கும்பகோணம், செப். 11 –

கும்பகோணம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த தந்தை மகளின் காதலன் வீட்டை அடித்து நொருக்கி, அவரின் பெற்றோர்களையும் அடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கும்பகோணம் அருகே உள்ளது கொத்துக்கோவில் இப்பகுதியில் வசித்து வருபவர் ராஜாராமன், 67 இவரது மகன் செல்வகுமார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் கருணாநிதி என்பவரின் மகள் கனிமொழி ஆவார்.

இந்நிலையில் செல்வகுமாரும், கனிமொழியும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து நேற்று முன் தினம் செப்.9 ஆம் தேதியன்று மேல்மருவத்தூரில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கனிமொழியின் தந்தை கருணாநிதி நேற்று காலை தனது மகன் மற்றும் உறவினர்களுடன் ராஜாராமன் வீட்டிற்கு வந்து, செல்வகுமாரை தகாத வார்த்தையில் திட்டியும், கட்டையால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, நாற்காலி இருசக்கர வாகனம் வாஷ்பேஷன் உள்ளிட்ட விலைவுயர்ந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்திவுள்ளனர்.

அப்போது அதனை தடுக்க வந்த ராஜாராமன் உறவினரான தினேஷையும் தாக்கி, அவரது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினையும், செல்போன் மற்றும் பணம் 20 ஆயிரத்தை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்த ராஜாராமன் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பின்பு அங்கிருந்து அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநீலக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியும், இச்சம்பவத்தில் காயமடைந்த ராஜாராமன், தினேஷ் ஆகியோரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளித்து வரும் நிலையில். ராஜாராமன் குடும்பத்தினரை தாக்கியவரை காவல்துறையினர் உடனே கைது செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் இது தொடர்பாக போலீசாரிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த போது இன்று இரவுக்குள் கருணாநிதி அவருடைய மகன் மற்றும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் நாளை காலை திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனால் காரைக்கால் சாலையில்  அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here