கும்பகோணம், ஆக. 30 –
கும்பகோணத்தில் உள்ள சிறியமலா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 14 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக இந்த முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறைச் சேர்ந்த 14 நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரி வரையிலான 56 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 14 நபர்களுக்கு முகாமிலேயே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பிரேமாவதி, வருவாய் கோட்டாட்சியர், தலைமை உதவியாளர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.