திருவள்ளூர், ஆக. 19 –
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி. கிரியாசக்தியின் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டதில் பேருந்தில் இரண்டு பைகளில் பொட்டலங்களாக போடப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் தேனி மாவட்டம் மயிலாடும்பாறையைச் சேர்ந்த நீதி ராஜன் (45), கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்த அமோஸ்கான் மோசஸ் (25) என்பதும் விசாரைணையில் தெரிய வந்தது.
மேலும் தற்போது அவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி அருகே வாடகை வீட்டில் வசித்து வருவது என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து நடைப்பெற்று வரும் விசாரணையில் அவர்கள் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்களா அப்படி யெனில் இவர்களின் பின்னணியில் வேறு யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது பற்றிய தீவிர விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.