கும்பகோணம், ஆக. 18 –

தஞ்சை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக இருந்த போதும், மாவட்ட பரப்பில், சராசரி மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது இதனை அதிகரிக்கும் வகையில், வீட்டிற்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தை செயல் படுத்த மாவட்ட நிர்வாகம், அரசுத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை சுற்றுச்சுவர் அல்லது மரக்கூண்டு அமைத்து அதனை பாதுகாப்பாக வளர்ப்பதெனவும், மேலும் ஓராண்டு காலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதனை மரமாக்க பாடுபடுவது என மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டத்தினை பள்ளி மாணவர்கள் வாயிலாக செயல்படுத்தவும் திட்டமிட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்கள் அதனை முறையாக பராமரித்து மரமாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை வழங்கி வருகின்றனர். அதன்படி இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாப்பான முறையில் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் நேட்டிவ் மேனிலைப்பள்ளி மைதானத்தில், பள்ளிக்கல்வித்துறை, கும்பகோணம் கல்வி மாவட்டம், கவின்மிகு தஞ்சை இயக்கம்,  ராமநாதபுரம் மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்க முத்துக்குமார், நேட்டிவ் முன்னாள் மாணவர்களும்,  ஊழலற்ற மக்கள் இயக்க பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து இந்த மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மேலும், இப்பள்ளியை சேர்ந்த என்எஸ்எஸ், சாரணர், இளையோர் செஞ்சிலுவை சங்கம், இகோ கிளப், ஆகியவற்றை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,

தஞ்சை மாவட்டத்தில், வீடு தோறும் விருட்சம் என்ற திட்டத்தின் கீழ், ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும்,  மாவட்டம் முழுவதும் வரும் அக்டோபர் நவம்பர் மாத இறுதிக்குள் இந்த இலக்கு முழுமையாக எட்டப்படும், இதுவரை இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் குறைவாக உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பாக இத்திட்டம் அமையும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here