கும்பகோணம், ஆக. 18 –
கும்பகோணம் அருகில் உள்ள தண்டாளம், கோழியக்குடி, அத்திக்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் அரண் அமைப்பினர் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கீழச்சேத்தி, ஏனாநல்லூர், தண்டாளம், கோழியக்குடி, அத்திகுளம், விசலூர், மங்கம்மாள்புரம், கீழ்மாத்தூர் போன்ற கிராமங்களுக்கு இதுவரை நகர பேருந்து வசதிகள் இல்லை என்பதால், அக்கிராமங்களுக்கு செல்வோர், மருதாநல்லூர், வலங்கைமான் அல்லது குடவாசல் போன்ற இடங்களுக்கு சென்று அங்கிருந்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு, உடனடியாக அரசு பேருந்து இயக்கப்படாத இக்கிராமங்களுக்கு விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும், என்பதை வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
நகர பேருந்து போக்குவரத்து வசதியில்லாததால் அக்கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பணிக்கு செல்வோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இப்பிரச்சினைக் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி நகர பேருந்து போக்குவரத்து வசதியை நிறைவேற்றித் தரும்படிக் கேட்டுக் கொண்டனர்.
ஆர்பாட்டத்திற்கு இளைஞர் அரண் அமைப்பு பொறுப்பாளர் சைமன் தலைமையேற்று நடத்தினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட திரளானவர்கள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மற்றும் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பிரபு ஆகியவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.