கும்பகோணம், ஆக. 05 –
கும்பகோணம் அருகே சன்னாபுரத்தை சேர்ந்த அபிராமி என்ற இளம் பெண்ணை (21), காதலித்து, 9 மாத கர்ப்பாக்கி விட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த பாரதி (18) என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்புகார் மீது காவல்நிலையத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு அபிராமியும் அவரது குடும்பத்தினரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சன்னாபுரம் பணிக்காரத்தெருவை சேர்ந்த தமிழ்செல்வத்தின் மகள் அபிராமி (21) இவரும், தேப்பெருமாநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் பாரதி (18) ஆகிய இருவரும் சன்னாபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றும் போது காதல் வயப்பட்டு, இருவரும் இரு வீட்டாருக்கும் தெரியாமல், திருப்பூரில் வேலைக்கு சென்று அங்கு கணவன் மனைவியாக குடும்பம் நடத்தியதாக தெரிகிறது.
இதில், தற்போது அபிராமி (21) 9 மாத கர்ப்பிணியாக உள்ளார், இது குறித்து அபிராமியின் பெற்றோர், பாரதி குடும்பத்தாரிடம் அபிராமியை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, அவர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து அபிராமி குடும்பத்தினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதியுடன் திருமணம் செய்து வைக்க கோரி புகார் அளித்திருந்தனர்.
இது குறித்து இருதரப்பினரிடமும் காவல்துறையினர் பேசி வந்த நிலையில், அபிராமி மற்றும் அவரது பெற்றோர் தரப்பினர் இன்று, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பிளக்ஸ் பேனருடன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலயறிந்து அங்கு வந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



















