திருவாரூர், ஜூலை. 17 –
இன்று தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைப்பெற்ற நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 மையங்களில் 1455 மாணவ மாணவியர்கள் நீட் நுழைவுத் தேர்வினை எழுதினார்கள்.
இத் தேர்வானது இன்று காலை 11:00 மணி முதல் மூன்று குழுக்களாக சென்று மாணவ மாணவிகள் தேர்வு எழுத மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டதற்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், இத்தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி 20 நிமிடம் வரை நடைபெற்றது. 5 தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுயிருந்தனர். தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பு பரிசோதனை நடைவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக தேர்வு மையங்கள் கிரிமிநாசினிக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தேர்வு அறைக்கு செல்லும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும் வெப்பமானிக்கொண்டு மாணவ மாணவிகளின் உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது.
அதிக உடல் வெப்பம் இருப்பவர்களை தனி அறையில் வைத்து தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நீட் தேர்வை எழுதினார்கள். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 1560 மாணாக்கர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 105 பேர் தேர்வு எழுத வரவில்லை மீதம் உள்ள 1455 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர்.




















