மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் 163 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் அ.வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சே. மோகன் .கொள்கை பரப்புச் செயலாளர் அருள்தாஸ். வழக்கறிஞர் அணி செயலாளர் தேவராசு. மாநில மையக் குழு உறுப்பினர் வெற்றிஅரசு. நீதிச் செயலாளர் இளஞ்செழியன்.உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மறைந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .அவர் பேசுகையில் செயல் அரசியலோ, சேவை அரசியலோ திமுக அரசில் கிடையாது, செய்தி அரசியல் மட்டுமே எனவும் கூறினார். அரை நூற்றாண்டு காலமாக திமுக அரசு செய்தி அரசியலை செய்து வருவதாகவும், திமுகவினர் சொன்னதை செய்வோம்,சொல்லாததையும் செய்வோம் என கூறும் திமுக, சொன்னதை செய்ய மாட்டார்கள், சொல்லாததை மட்டுமே செய்வார்கள் எனவும், தமக்கு காங்கிரஸ் இன பகைவன் எனவும், பாஜக மனித குல பகைவன் எனவும் அவர் விமர்சித்தார். இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால், பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனவும், இந்திய விடுதலைக்கு ஆர்எஸ்எஸ் போராடினார்களா எனவும் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இஸ்லாமிய, கிறிஸ்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டும் இவர்கள், அதை நிறுத்தி விட்டால் இந்தியா என்ற ஒரு நாடே இருக்காது என்றார். இந்தியாவில் எல்லா மொழிகளும் இருக்கும் எனில் ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழியாக இருக்கும் என்றால்,இந்தியா பல நாடுகளாகும் எனவும்,உங்கள் தாய் அழகானவள் என்றால் பிரச்சினை இல்லை, ஆனால் என் தாய் அசிங்கமானவள் என கூற தகுதியில்லை எனக்கூறினார்.
தொடர்ந்து, வரியை வசூலித்து கொடுக்கும் மத்திய அரசு வட்டி கடை நடத்துகிறதா அல்லது கந்து வட்டி நடத்துகிறதா அல்லது , கவர்ன்மென்ட் நடத்துகிறதா என கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்களின் மசூதி இருக்கும் இடங்களிலெல்லாம் இவர்களின் கோயில்கள் இருப்பதாக கூறுகிறார்கள் எனவும், மக்களை பற்றி சிந்திக்கிறவர்களுக்கு சாதி, மதம்,கடவுளை நினைக்க நேரமிருக்காது எனவும்,சாதி, மதம்,கடவுளை நினைப்பவர்களுக்கு மக்களை பற்றி சிந்திக்க நேரமிருக்காது எனவும் அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் திரளான கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் யாபேஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



















