கும்பகோணம், ஜூன். 11 –
இன்று கும்பகோணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டமிட்டபடி வரும் 13 ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், இன்றும், நாளையும் இது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம் கும்பகோணம் தாராசுரம் கே.எஸ்.கே கல்லூரியில் துவங்கிய முகாமில் 170 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுனர்.
தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று இம்முகாம் மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
வரும் 13 ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும், அதற்கான ஆயத்தப்பணிகளான வகுப்பறைகள் சுத்தப்படுத்துவது, கழிவறைகள் சுத்தப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் இப்பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களிடம் புகார் வந்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




















