காஞ்சிபுரம், மே. 23 –
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட நாயகன் குப்பம், பிள்ளையார்குப்பம், மேட்டூர் பகுதியை சேர்ந்த பொது மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சீர்கேட்டை விளைவிக்கும் பன்றி வளர்ப்பு கூடாரத்தை அகற்ற வேண்டி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட நாயக்கன் குப்பம் ஊராட்சி மற்றும் பிள்ளையார்குப்பம், மேட்டூர் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சீர்கேட்டை விளைவிக்கும் பன்றி வளர்ப்பு கூடாரத்தை அகற்ற வேண்டி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 4 கிராம பொதுமக்கள் வசிக்கும் மத்தியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பன்றி வளர்ப்பு கூடாரம் செயல்பட்டு வருகின்றன எனவும், இவற்றில் சுமார் 800க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வருவதால் அவை அருகில் உள்ள ஏரியில் விடப்பட்டு அந்த ஏரியின் சுகாதாரத்தை முழுவதுமாக நாசமாக்கி வருவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பன்றிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளில் பல விதமான கழிவுகளை இறையாக கொடுக்கப்பட்டு அந்த இடத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதியிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் இவற்றால் ஏரியின் குடி நீர் மாசுபட்டு கால்நடைகள் பெருகி பொதுச்சுகாதரத்தை கேள்விக்குள்ளாக்கி வரும் நிலையில், அதன் திடீர் திடீரென இறந்து விடுவதாகவும் அதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அப்பகுதியில் வளர்க்கப்படும் பன்றி வளர்ப்பு கூடாரத்தை அங்கிருந்து நிரந்தமாக அகற்றி எங்கள் சுற்றுப்புறத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என மனு அளிக்க மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது தங்கள் பகுதியில் பன்றி வளர்ப்பு முறையாக கையாளாமல் பல்வேறு பகுதிகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் பன்றிகள் அசுத்தம் செய்வதும் அவற்றால் கால்நடைகளுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்து பன்றி வளர்ப்பு கூடாரத்தை நிரந்தரமாக அகற்றி தருமாறு மனு அளித்தனர்.
இந்நிகழ்வின் போது ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சேகர், அரவிந்தன், தேவராஜன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.