கும்பகோணம், மே. 11 –
கும்பகோணம் அருகே மூப்பகோவில் காளியம்மன் கோவிலில் நேற்றிரவு காளி திருவீதி உலா புறப்பாடு நடைபெறயிருந்த நிலையில், இரு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடந்த 8ஆம் தேதி கும்பகோணம் அருகே மூப்பக்கோவில் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பைச் சேர்ந்த 10 நபர்கள் மீது சுவாமிமலை காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மூப்பக்கோவில் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்றிரவு காளி திருவீதி உலா புறப்பாடு நடைபெற இருந்தது. இந்த நேரத்தில் ஒரு தரப்பை சேர்ந்த சிலர் மீண்டும் மோதல் உருவாகும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காளியம்மன் கோவிலில் காளி திருவீதி உலா ஒரு பகுதிக்கு செல்லக்கூடாது என அப்பகுதி மக்கள் தெரிவித்ததால் பரபரப்பு அதிகமாகியது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருதரப்பினரிடையே சமதானப் பேச்சுவார்த்தை நடத்தி .இக்கோவில் திருவிழா முடிந்ததும் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து காளி திருநடனம் விழா போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.