சோழிங்கநல்லூர், ஏப். 18 –
இன்று, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் வி.இ.மதியழகன் தலைமையில் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.
இதில் 193, 194, 195, 196, 197, 198, 199, 200 ஆகிய மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மின்சாரத்துறை அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த 5 வருடங்கள் கழித்து நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்களை அதிகாரிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்திக்கொண்டு பின்னர் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் பிரச்சனை, மின் துண்டிப்பு பிரச்சனை, மருத்துவமனை குறித்தான பிரச்சனை, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும், ஒருசில பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் மண்டல உதவி கமிஷனர் சுகுமார், திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஏகாம்பரம், முருகேசன், சங்கர், விமலா கர்ணா, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் டி.சி.கோவிந்தசாமி, அஸ்வினி கருணா, மேனகா சங்கர், மற்றும் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.