பொன்னேரி, ஏப். 04 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், கிளைச்சிறை என பல்வேறு அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. காவல் நிலையமும் இங்கு இருந்த நிலையில் கட்டிடம் சிதிலடைந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பொன்னேரி கிளைச்சிறைக்கு எதிரே உள்ள காலி இடத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் மணல் திருட்டு, கொலை, கொள்ளை, சாலை விபத்து என பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட லாரி, வேன், மாட்டுவண்டி, ஆட்டோ என பல வகையான வாகனங்கள் இருக்கிறது.

திங்கட்கிழமையான இன்று மிகவும் பரபரப்பான சூழலில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் வாகனங்கள் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

கோடை வெயில் ஒருபுறம் பழைய வாகனங்கள் என்பதால் தீ மளமளவென பற்றி அருகிலிருந்த சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ரசாயன நுரை மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுத்து முற்றிலும் அணைத்தனர்.

 

பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வளாகம், கிளைச்சிறை என அருகருகே அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக அங்கிருந்த மரக்கிளைகளில் இருந்து கீழே விழுந்த சருகுகளை குவித்து தீ வைத்த போது இந்த தீ விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here