கும்பகோணம், மார்ச். 23 –
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த ம.க.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
15 உறுப்பினர்கள் கொண்ட ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4ம் தேதி தலைவர் தேர்தல் நடந்த போது திமுக கவுன்சிலர்கள் 3 பேர் வராத நிலையில், தேர்தல் நடத்துவதாக செயல் அலுவலர் இளவரசன் கூறியபோது, தேர்தல் நடத்தக்கூடாது என வலியுறுத்திய மதிமுக, திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தேர்தலுக்கான விண்ணப்பங்களை கிழித்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாமக, அதிமுக, சுயேச்சை உறுப்பினர்கள் 8 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தலை உடனடியாக உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று காலை 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதி மன்றத்தில் உறுதிமொழி அளித்தது. அதன்படி இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆடுதுறை பேரூராட்சியில் தேர்தலை கும்பகோணம் கோட்டாட்சியர் கண்காணிப்பில் தேர்தல், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற இருந்தது.
இந்நிலையில் காலை 10.30 மணி வரையும் திமுக, மதிமுக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 7 பேர் வராததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மீதமுள்ள அதிமுக, பாமக, சுயேட்சை உறுப்பினர்கள் 8 பேர் வந்திருந்தனர். இந்நிலையில் ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக மதிமுக உள்ளிட்ட 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால்,
பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த ம.க.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக அதிமுக 4 வது வார்டு உறுப்பினர் கமலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.





















