கும்பகோணம், மார்ச். 17 –
தமிழகத்தை பாலைவனமாக்கும், மேகதாது புதிய அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடகவின் திட்டத்தை கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு அணைக்கட்ட அனுமதி மறுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்தும், ஒன்றிய அரசும், புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் கும்பகோணத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு காவிரிநீர் கிடைக்காமல் செய்யும் வகையிலும், தமிழகத்தை பாலைவனமாக்கும் வகையில், கர்நாடக மாநிலம், காவிரியின் குறுக்கே மேகதாதுவில், புதிய அணை கட்ட, தனது நிதி நிலை அறிக்கையில் முதற்கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை கண்டித்தும், இத்தகைய அணை கட்டும் முயற்சியை மத்தியில் ஆளும் ஒன்றிய மோடி அரசு, அதனை தடுத்து நிறுத்திட வேண்டும், தமிழக அரசும் இதற்காக கர்நாடக அரசையும், ஒன்றிய அரசையும், வலியுறுத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட துணை செயலாளர் என் கணேசன் தலைமையில், கும்பகோணம் பழைய மீன் அங்காடி அருகே, கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.