திருவள்ளூர், ஜன. 17 –
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் 1000 பேர்களுக்கு அன்னதானம், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பல்வேறு போட்டிகளை நடத்தி அதில் வெற்றிப் பெற்ற வர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும் அம்மையார்குப்பம் அதிமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலபிட்டியில் 1917 ஜன.17-ம் தேதி இவர் பிறந்தார்.
தொடக்கத்தில் அவர் காந்தியவாதியாக இருந்தாலும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் தன்னை 1953-ல் இணைத்துக் கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய எம்ஜிஆர், பின்னாளில் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார்.
கடந்த 1977-ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். முதல்வராக இருந்தபோது நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார். சத்துணவு திட்டம், 5-ம் உலகத் தமிழ் மாநாடு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவசவேட்டி – சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இதனை தொடர்ந்து எம்ஜிஆர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அம்மையார்குப்பம் அதிமுகவினர் இன்று பேரூந்து நிலையம் அருகே உள்ள மறைந்தும் மக்கள் இதயங்களில் இன்றும் வாழும் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு சிறப்பு அழைப்பாளாராக இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முன்னாள் திருத்தணி சட்டமன்ற மற்றும் நாடளு மன்ற உறுப்பினரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான கோ.அரி தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் இதனைத் தொடர்ந்து அம்மையார்குப்பம் சக்தி அம்மன் கோயில் கிழக்கு தெருவில் சி.ஏ.சீனிவாசன் தலைமையில் நடைப்பெற்ற குழந்தைகளுக்கான உரி அடித்தல், முறுக்குப் போட்டி, சைக்கிள் போட்டி, ஓட்டபந்தயம், நடத்தப்பட்டது. அதில் வெற்றிப்பெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும், மா.பொ.சி.தெரு, இந்திராநகர், குமரன் தெரு, ஜி.எஸ்.டி.நகர், சேஷப்ப முதலி தெரு, ஆந்திரா பால் நிலையம் ஆகிய தெருக்களிலும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் முன்னாள் துணை தலைவர் சி.கே.ஜெயவேல், அம்மையார்குப்பம் நகரச்செயலாளர் எஸ்.எஸ்.லோகநாதன், நகர துணைச்செயலாளர் எம்.ஜி.தயாளன்,மாவட்ட கவுன்சிலர் கோ.குமார். அம்மையார்குப்பம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்.டி.யயாதி. மற்றும் திரளான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியை அம்மையாரகுப்பம் அதிமுக, எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவினர் என அனைவரும் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.






















