கும்பகோணம், டிச. 17 –

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தொன்மையான ஐம்பொன் சண்டிகேஸ்வரர் சிலை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் வழங்கிய புகைப்படங்கள் உதவியுடன் நேற்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில், அந்த கோயிலுக்குரிய சுவாமி சிலைகள் மட்டுமின்றி, சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த கோயில்களின் 400க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க, தொன்மையான சுவாமி சிலைகள் பாதுகாப்பு கருதி, பல ஆண்டுகளாக அங்கு வைத்துப் பாதுகாக்க பட்டு வருகிறது.

 இந்நிலையில், இப்படி இக்கோயில் வளாகத்தில், அருகேயுள்ள கீழ்மணக்குடி கிராமத்தில் உள்ள விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மற்றும் ரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றை சேர்ந்த ஆறு சுவாமி சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே திருடப்பட்டதாகவும், இது குறித்து அறநிலையத்துறையினர் புகார் எதுவும் தராத நிலையில், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுகக் வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து 04-2017 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதன் பேரில் கோயில் அர்ச்சகர், முன்னாள் கோயில் ஊழியர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர், இந்நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தொல்லியல் துறையினர் வசம் இருந்த புகைப்படங்களை கொண்டு ஆய்வு செய்ததில்,

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் செயல்படும் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் உள்ள ஆவணங்களில் அதுவரை அந்த கோயிலில் இருந்த சண்டிகேஸ்வரர் சிலைகள் 2 ஆக இருந்த எண்ணிக்கை 1973க்கு பிறகு உள்ள ஆவணங்களில் இருந்து தற்போது வரை ஒன்றாக குறைத்து காண்பிக்கபட்டு வந்தது தெரியவந்தது, அதே வேளையில் இந்த சிலை, இதே பாதுகாப்பு மையத்தில் உள்ள கீழ்மணக்குடி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து ஏற்கனவே திருடப்பட்ட விநாயகர், அஸ்திரதேவர், வள்ளி, தேவசேனை, புஷ்கலா, சந்திரசேகர அம்மன் ஆகிய ஆறு சிலைகளுடன், ஏழாவதாக சண்டிகேஸ்வரர் சிலை ஒன்றும் திருடப்பட்டுள்ளது, அதனை மறைக்கும் பொருட்டு, பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இரு சண்டிகேஸ்வரர் சிலையில் ஒன்றை குறைத்துவிட்டு, கீழ்மணக்குடி விஸ்வநாதர் கோயில் சண்டிகேஸ்வரர் சிலையாக ஆவண பதிவேட்டில் மாற்றி பதிந்து கீழ்மணக்குடி கோயில் சண்டிகேஸ்வரர் சிலை திருட்டை மறைத்திருப்பது தற்போது சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையிலும், புகைப்பட ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது உடனடியாக இதனை மீட்டு, வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கும் வகையில் ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட இச்சிலை, நேற்றிரவு பாதுகாப்பாக கும்பகோணத்திற்கு கொண்டு வந்துள்ளனர்,  இத்தகவலை, முறைப்படி நேற்றிரவு கும்பகோணத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக் நடராஜன் மற்றும் ராஜாராம் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தனர். 

இவ்வழக்கின் விசாரணை தொடர்வதால், அதன் விசாரணைக்கு பிறகே, முழு விவரமும் தெரியவரும். மேலும் எத்தனை சிலைகள் மாயமானது அங்குள்ள சிலைகள் அனைத்தும் பழங்கால சிலைகள் தானா ? தொன்மையான சிலைகளை அங்கிருந்து திருடி கடத்தி விட்டு, அதற்கு பதிலாக வேறு சிலைகள் ஏதேனும் மாற்றி வைத்து மறைக்கப்பட்டுள்ளதா என்பது எல்லாம் வெளியுலகிற்கு தெரியவரும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here