திருவள்ளூர், ஜூன். 29 –
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேவுள்ள மதுரவாசல் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுக்கட்டி குடியிருந்து வருபவர் வீட்டிற்கு சீல் வைத்து, அதிரடி நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட இந்து சமயம் அறநிலையத்துறையினர் எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்துள்ள மதுரவாசல் கிராமத்தில், ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயில் உள்ளது. மேலும் இத்திருக்கோயில் இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சர்வே எண் 181, – ல் உள்ள 20 சென்ட் நிலத்தினை அப்பகுதியில் உள்ள 9 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடுக்கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வீட்டில் குடியிருந்து வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு இப்பிரச்சினைத் தொடர்பாக கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நில ஆக்கிரப்புதாரர்கள் சார்பில் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் கடந்த 5.ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர்ந்து அவ்விடத்தில் குடியிருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்து சமயம் அற நிலையத் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றுவதாற்கான ஆணையினை பெற்று, திருவள்ளூர் மாவட்ட இந்து சமயம் அறநிலையத்துறையின் உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலைத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 9 வீடுகளுக்கு சீல் வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுக்குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கும் போது, தாங்கள் இவ்விடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம் எனவும் மேலும் இக்குடியிருப்புக்கான வீட்டு வரி, மின் இணைப்பு பெற்று அரசு சம்பந்தப்பட்ட அனைத்து வரிகளையும் குடும்ப அட்டை, இந்திய தேர்தல் ஆணைய அடையாள அட்டை, உள்ளிட்ட அனைத்தும் தங்களுக்கு அரசு தரப்பில் தரப்பட்டு இவ்விடத்தில் குடியிருந்து வருகிறோம் எனவும், மேலும் இப்பகுதியில் தினக்கூலியாக இருந்து வருகிறோம் எனவும், மேலும் நாங்கள் இவ்விடத்தில் வீடுக்கட்டும் போது இந்நிலம் இந்து சமயம் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்பது தெரியாது, மேலும் வீடுக்கட்டும் போது யாரும் தங்களுக்கு இதுக்குறித்து தெரியப்படுத்தவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் தினசரி கூலிவேலை செய்து சம்பாதித்த பணம் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் மற்றும் சேமிப்பில் இருந்த நகைகளை விற்றும் இவ்விடத்தில் வீடுக் கட்டி வாழ்ந்து வருகிறோம் என அப்போது அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் இவ்விடம் இந்து சமயம் அற நிலையத்துறைக்கு சொந்தமான இடம் என அத்துறை சார்பில் நோட்டீஸ் மூலம் தெரிவித்த தகவல் மூலம் அறிந்தோம்.
அதனால் நாங்கள் அடுத்து என்ன செய்வதென அறியாது அதிர்ச்சியில் இருந்த நிலையில் தற்போது, திடீரென அத்துறை சார்பில் அதிரடியாக இவ்வித நடவடிக்கைகளை எடுத்துவுள்ளனர் எனவும் மேலும் தற்போது தங்கள் பெண் குழந்தைகளோடு எங்கே போய் தங்குவதென தெரியாமல் தவித்து வருவதாகவும், மேலும் எங்களுக்கு மாற்று இடமும் அரசு சார்பில் தரவில்லை எனவும், வீடுக்கட்ட நாங்கள் வாங்கிய கடன் இன்னும் முடிவடையாத நிலையில், எங்கள் எதிர்காலமும், வாழ்வாதப் பிரச்சினையும் பெருத்த கேள்விகளோடு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. என அப்போது அவர்கள் கண்கலங்கி அழுது புலம்பினார்கள். மேலும் எங்களுக்கு குடியிருப்பதற்கான மாற்று ஏற்பாட்டினை செய்து தர வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.