குடவாசல், ஜூலை. 16 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சேங்காலிபுரம் காலனி தெருவில் வசிக்கும் அன்புச்செல்வன் என்ற விவசாயிக்கு, சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மோட்டார் பம்பு செட்டு மூலமாக தண்ணீர் எடுத்து கிணற்றுப் பாசனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தனது வயலுக்கு அன்புச்செல்வன் சென்றுள்ளார். அப்பொழுது, மோட்டார் பம்ப் செட் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, சுமார் 200 அடி நீளமுள்ள காப்பர் வயர் திருடப்பட்டும், பியூஸ் கேரியர் உடைக்கபட்டும் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், அதே பகுதியில் ஐந்து மோட்டார் பம்பு செட்டுகளிலும் இதே போல் காப்பர் வயர் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மோட்டார் பம்பு செட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து டீசலை எடுத்து, அதன் மூலம் காப்பர் ஒயர் எரிக்கப்பட்ட  சாம்பல் அப்பகுதியில் காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் விவசாயி அன்புச்செல்வன் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், இதைப் போன்றச் சம்பவம் கடந்த வாரமும் அதே பகுதியில் மோட்டார் பம்பு செட்டு காப்பர் வயர் திருடு போனது என்பது குறிப்பிடத் தக்கது. அத்திருட்டுக் குறித்து ஏற்கனவே குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இதுக்குறித்து விவசாயி அன்புச்செல்வன் கூறும்போது,  குடவாசல் காவல் துறையினர் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்த திருட்டு நடைபெற்று இருக்காது எனவும், காவல்துறையின் அலட்சியப் போக்கே இந்த தொடர் திருட்டுக்கு காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தற்போது கொடுத்துள்ள புகார் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். இல்லாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினார். இதேப் போல தொடர்ந்து வலங்கைமான், மேலப்பாலையூர், சேங்காலிபுரம் போன்ற பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

 

பேட்டி: அன்புச்செல்வன்,           விவசாயி                சேங்காலிபுரம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here