கும்மிடிப்பூண்டி, செப். 10 –
கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பக்கத்தில் அதிவேகமாக வந்த மினி லாரி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியட்டரில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த மினி லாரியின் ஓட்டுனர் கௌதம் (22) என்பவரை அவசர ஊர்தியில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லேசான காயத்துடன் இருந்த சாந்தகுமார் (29), சிலம்பரசன் (28) ஆகியோரை மீட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் மினி லாரியில் இருந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் விபத்துக்குள்ளான மினி லாரியில் சுமார் 10 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி சென்னை திருவெற்றியூர் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சாந்தகுமார் (29), சிலம்பரசன் (28) ஆகிய இருவரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.