கும்பகோணம், டிச. 08 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டனர் என அத்தல வரலாறு கூறுகிறது.

மேலும் இத்தலத்தில், குன்று முலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை) இரு புறமும் திருமகள், கலைமகள், வீற்றிருந்து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும்; தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார். எனவும், இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார் என தல வரலாறு தெரிவிக்கிறது.

மேலும் இத்தலத்தில் உள்ள சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும் எனவும், மேலும் இத்தலத்தில் ராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார் என மேலும் தல வரலாறு கூறுகிறது.

இத்தகு பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்கள் சாமி வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வுக்கான 7 ஆம் நாளான நேற்று உற்சவர் நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழந்தருள திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியின் முன்னதாக மாலை மாற்றும் நிகழ்வும் தொடர்ந்து நலுங்கை வைத்தலும் நடைபெற்ற பிறகு, சுவாமிகளுக்கு கங்கனம் கட்டி, பூணூல் அணிவித்து, சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் கூறி, சீர்வரிசை தட்டுக்களுடன், தேங்காய், பூ பழங்கள், பலகாரங்களுடன், திருமாங்கல்யம் வைத்து பூஜித்து பின், நாதஸ்வர மேள தாளம் முழங்க, உதிரி மலர்கள் தூவி, திருமாங்கல்ய தாரணம் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான 9ம் தேதி சனிக்கிழமை திரு தேரோட்டமும் தொடர்ந்து 10ம் நாளான 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மல்லாரி இசை திருவிழா அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திருக்கோவிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தொடர்ந்து 11 ஆம் நாளான 11 ஆம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நிறைவு பெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here