திருவாரூர், மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களில் விவசாயிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களில் விவசாயிகள் இரயில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட விவாயிகள் கைதாகினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்தியதில்  ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தை நிறுத்த கோரிக்கைகயை ஏற்றுக்கொண்டதாக எழுதிகொடுத்து நிறைவேற்ற மறுத்து விவசாயிகள் வாழ்வில் விளையாடும் மோடி அரசை கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தியும், வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில்நிலையங்களில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எர்ணாகுளம் பகுதியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் பயணிகள் இரயிலை திருவாரூர் இரயில்நிலைய சந்திப்பில் இச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நடராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் அணியாக வந்து இரயில் தண்டவாளத்தில் நின்று மறியலில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக இதே எர்ணாகுளம் பயணிகள் இரயிலை நீடாமங்கலம் இரயில்நிலைய சந்திப்பில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில கௌரவ தலைவர் நீலம் அசோகன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்குள்ள இரயில் தண்டவாளம் பகுதியில் நின்று இரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டு இரயில் நிலையங்களிலும் இரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் உள்ள தனியார்; திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். விவசாயிகளின் இத்தகைய இரயில் நிலைய போராட்டத்தினையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here