கும்பகோணம், ஜூன். 06 –
கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தரை கடைகளுக்கு வசூலிக்கப்படும் தினசரி வாடகை வரி உயர்த்தப்பட்டதை நடைப்பாதை வியாபாரிகள் கண்டித்து மகாமகம் குளத்திலிருந்து பேரணியாகச் சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கும்பகோணம் மகாமக குளம், பெரிய கடைத்தெரு, மடத்து தெரு மற்றும் பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிகளில் காய்கறி பூ பழங்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதில் அவர்களது தினசரி வருமானம் மிகச் சொற்பமாகவே கிடைக்கிறது. மேலும் இவர்களில் பெரும்பகுதி தினசரி முதலீடுக்காக தினசரி மற்றும் மாத வட்டி என வாங்கி வியாபாரத்தில் முதலீடு செய்து மிகவும் கடினமான நிலையில் தொழிலை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் வணிகம் செய்யும் சில்லறை வணிகர்களுக்கு விதிக்கப்படும் வாடகை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
வரி உயர்வு தொடர்பாக தரைக்கடை வணிகர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் (CPI) நடைபெற்றது. வரி உயர்வு திரும்பப் பெறக் கோரி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மகாமக குளக்கரையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிக் வியாபாரிகள் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு உயர்த்தப்பட்ட வாடகை வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாநகராட்சி பழைய வாடகை ரூ 10 மட்டும் வசூலிக்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். தற்பொழுது தரைக்கடை 30 ரூபாயும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த தினசரி வாடகை வரிவுயர்வே உடனே திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் விண்ணை முட்டுமளவிற்கு குரல் முழக்கமிட்டனர்.