கிருஷ்ணகிரி, நவ. 17 –

உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினம் தினம் பயத்துடன் சாகச பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு கட்டங்களாக மாவட்ட மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னும் அதுக் குறித்து கவலைப் படாமல் செயல்படுகிறதோ எனும் அச்சத்துடனும், பல்வேறு கேள்விகளோடும் சமூக அக்கரைக் கொண்டவர்கள் செய்வதறியது கைப் பிசைந்து நிற்கும் அவலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கிராம கிராமங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தினசரி இப்பள்ளிக்கு வருகைத் தந்து படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளி சென்னை மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது. தினம் தினம் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள்  இந்த சாலையை கடந்து தான் பள்ளிக்குச் சென்று வர வேண்டும்.

சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் கனரக வாகனங்களும், கார்களும், அதிவேகமாக வந்து செல்லும். இந்த வாகனங்களுக்கு மத்தியில் தினமும் மாணவ-மாணவிகள் உயிரை பொருட்படுத்தாமல் அலட்சியமாக சாலையை கடந்து வருகின்றனர்.  மாணவ மாணவிகள் கடந்து செல்லும் போது எந்த ஒரு வாகனமும் வேகத்தை குறைப்பது இல்லை. மேலும் சாலை கடக்க இந்த பகுதியில் எந்த வித அறிவிப்பு குறியீடு பலகையும் இல்லை. மேலும் மாணவ மாணவிகள் கடப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களும் இருப்பதில்லை. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சாலையை உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையில் ஓடி வந்து கடப்பது காண்போரின் நெஞ்சங்களை பதபதைக்க வைக்கிறது.

மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு நேரங்களில் சாலையோரங்களில் கும்பல் கும்பலாக விளையாடி கொண்டும் சாலையில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு செல்வதால் இப்பகுதி அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் மோதி பெரும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.

பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளின் கைகளை பிடித்து கொண்டு சாலையை ஓடி சென்று கடக்கின்றனர். மேலும் அடிக்கடி இந்த பகுதியில் பெரும் விபத்துகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவ மாணவிகளின் இந்த தினம் தினம் ஆபத்தான பயனத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட மற்றும் மாநிலத்தின் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிர்வாகம் ஒரு தரை மேம்பாலம் அல்லது ஒரு புதிய மேம்பாலம் அல்லது வேறுவிதமான மாற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு அமைத்து தர பள்ளி மாணவ, மாணவியர்கள் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எதுவும் வரும் முன் காப்பதுதான் நல் அரசின் கடமை என்பதையும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பல்வேறு நலத் திட்டங்களையும், குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பான சூழலையும் பயமின்றி படிப்பறிவுப் பெற்று வர உதவும் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் இக்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அவர்களின் பெற்றோர்களின் சார்பாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here