திருவாரூர், ஜூன். 05 –

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத்தை அடுத்த கோவில்திருமாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவாடை திருமாளம் கிராமத்திற்கு உட்பட்ட சாணாந்தோப்பு தெருவில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன சமுதாயத்தினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தெருவிற்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அம்மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய அடிப்படை வசதிகள் இன்றி கடந்த 5 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப் பிரச்சினைத் தொடர்பாக சாணாந்தோப்பு பகுதிமக்கள் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு துறைச்சார்ந்த அலுவலகம் மற்றும் அரசு அலுவலர்களிடம் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தி புகார் மனு வழங்கியும், அப்பிரச்சினைத் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. என அம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் சாணாந்தோப்பு பகுதியில் வசிக்கும் பாஜகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் அரசு அதிகாரிகளின் துணையுடன் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர விடாமல் தடுத்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சாணாந்தோப்பு தெருமக்கள் தங்களது குழந்தைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக அரசை கண்டித்து இன்று பூந்தோட்டம்-காரைக்கால் சாலை மார்க்கத்தில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த பேரளம் காவல்துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சு வார்த்தை மேற்கொண்டும், அம்மக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வருவாய்துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தை மேற் கொண்டு, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்ததின் பேரில் அச் சாலைமறியல் போராட்டத்தை அக் கிராம மக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here