மீஞ்சூர், ஆக. 26 –

மீஞ்சூரிலிருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட சாலையில் சின்ன முல்லைவாயல் சுங்கச்சாவடி அருகில் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அம் மையத்தில் 24 மணிநேரமும் போக்குவரத்து காவல்துறையினர், முதலுதவி குழுவினர், மீட்பு படையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பணியாற்றிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காவல் உதவி மையத்தினை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, போக்குவரத்து காவலர்களுக்கு பிரதிபலிப்பு சட்டைகளை காவல் ஆணையர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கும் போது மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் 40 கிமீ தூரம்  ஆவடி மாநகர காவல் எல்லையில் வருவதாகவும், துறைமுகத்தில் இருந்து அதிகளவு கனரக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் விபத்துக்களை தடுத்திடவும், குறைத்திடும் வகையிலும், இந்த காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று முதலுதவி அளித்தல், போக்குவரத்தை சீர்படுத்துதல், மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் விரைவுபடுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், விபத்துக்களை குறைத்திடும் வகையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் மின்விளக்குகள் அமைப்பது, ஒளிர்விப்பான்களை பொருத்துதல், அங்கு போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுதல், தானியங்கி சிக்னல் அமைத்தல் என விபத்துக்களை கட்டுப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பள்ளிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், மறுபுறம் காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வரும் வாகனச் சோதனைகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் போதை பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை எட்டும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணைஆணையர் விஜயகுமாரி, மீஞ்சூர்  துணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர் சிரஞ்சீவி மற்றும் இதர பிரிவுகளைச் சார்ந்த காவல்துறை உயர் அலுவலர்கள், போக்குவரத்து காவலர்கள் என திரளானோர்  இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here