கும்பகோணம், ஜூன். 23 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்காவிற்குட்பட்ட கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள், மற்றும் விவசாயிகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் நரிக்குடி தங்க.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்க்கரை ஆலையின் சொத்து மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து ஒருதலைபட்சமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், மேலும் ஆலை தொழிலாளர்களுக்கும், கரும்பு ஆட்களுக்கும் வெட்டு மற்றும் கரும்பு வாகன நிலுவை தொகையினை உரிமையாளர்களுக்கும் உரிய வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும், மேலும் சர்க்கரை ஆலையை கார்ப்பரேட் அதிபருடன் இணைந்து சாராய ஆலையாக மாற்றாமல் தமிழக அரசே அவ்வாலையை ஏற்று நடத்த வேண்டும் எனவும்,மேலும் நிலமில்லா ஏழை கூலி தொழிலாளிகளின் பெயரில் காரும்பாலை நிர்வாகம் வாங்கிய போர்ஜரி வங்கி ஆலை பெருங்கடனை ரத்து செய்து மத்திய குற்றப்புலனாய்வு துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
மேலும் விவசாயிகள் பெயரில் உள்ள வங்கி கடன் முழுவதும் தள்ளுபடி செய்திட வேண்டும். மேலும் சர்க்கரை ஆலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய திவால் தீர்ப்பாய நடவடிக்கையால் வேலை இழப்பு ஏற்பட்ட தொழிலாளர்களையும், பணியாளர்களையும் வயதைக் காரணம் காட்டாமல் அரசே பணியமர்த்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.